கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளும் நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது.
வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அருள் முருகன், முன்னிலையில் இருதரப்பு வழக்கறிஞர்களும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். முன்னதாக காவல் துறை தரப்பில், குற்றவாளிகள் இருவரையும் 28 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு மனு தாக்கல் செய்திருந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் காவல் துறைக்கு ஆதரவாக வாதிட்டார்.
இதற்கு குற்றவாளிகள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், 28 நாள்கள் காவல் வழங்கக் கூடாது என தனது எதிர்ப்பை பதிவுசெய்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றவாளிகள் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரை 10 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க காவல் துறைக்கு அனுமதி அளித்தார்.
இது குறித்து அரசு வழக்கறிஞர், விசாரணைக்குப் பிறகு வரும் 31ஆம் தேதி குற்றவாளிகள் இருவரும் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
காவல் துறையினர் முதல்கட்டமாக குற்றவாளிகள் இருவரிடமும் துப்பாக்கி, கத்தி ஆகியவை குறித்து விசாரணை மேற்கொண்டு, 125-க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்கப்போவதாகக் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: தவ்பீக் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு முடித்துவைப்பு...