கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் தேசிய விநாயகர் தேவஸ்தானம் கோயிலுக்கு சொந்தமான இடம் நீண்டகால குத்தகைக்கு விடப்பட்டது. இந்த இடத்தை ஒத்திக்கு எடுத்தவர்கள் உரிய அனுமதியின்றி கடைகள் கட்டி அதனை வாடகைக்கு விட்டிருந்தனர்.
உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தது. உடனே கடையை கட்டியவர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.
ஆனால் நீதிமன்றம் அவர்களது மனுவை ரத்து செய்து உத்தரவிட்டது. இன்று (அக.28) மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதியின்றி கட்டப்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜீத் முன்னிலையில் மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வியாபாரிகள் கூறுகையில், "இப்பகுதியில் உரிய அனுமதியுடன்தான் கடைகள் கட்டி வியாபாரம் நடைபெற்று வந்தது. ஆனால் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் கடைகளுக்கு அனுமதி இல்லை என்று மாநகராட்சி நிர்வாகத்தினர் கூறி வருகின்றனர்" என குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: வேலூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்திய 5 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!