கன்னியாகுமரி மாவட்டம், வடசேரியில் மாநகராட்சிக்குச் சொந்தமான கனகமூலம் சந்தை உள்ளது. கேரள வர்த்தகத்தை மையமாகக் கொண்டு, மன்னர் காலத்தில் தொடங்கப்பட்ட, நூறு ஆண்டுகளைக் கடந்த இந்தச் சந்தையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
கனகமூலம் சந்தையில் ஆண்டுதோறும் மாநகராட்சி சார்பில் கடைகள் குத்தகைக்கு விடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நடப்பாண்டில் கடந்த மாதம் கடைகள் குத்தகைக்கு விடப்பட்டன. அதில் ராஜன் என்பவர் மூன்று கடைகளை குத்தகைக்கு எடுத்து பழ வியாபாரம் செய்துவந்தார்.
இதற்கிடையில் சந்தையில் உள்ள மற்ற குத்தகைதாரர்கள், ராஜனிடம் அவரது கடையைக் கேட்டு வந்ததாகவும், அதற்கு ராஜன் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவருடைய மூன்று கடைகளுக்கும் தீ வைத்தனர். இதில் கடையில் இருந்து அனைத்துப் பழங்களும் முற்றிலும் எரிந்து நாசமாகின. இது குறித்து ராஜன் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "சேலம் மாவட்டத்தை பிரிக்க வேண்டும்" - ஜி.கே.மணி