குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தங்களது மகள் மாயமானது குறித்து பெற்றோர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்திய காவல் துறையினர் இருவரையும் கண்டுபிடித்து, இளைஞரைக் கைதுசெய்து, அந்தச் சிறுமியை மீட்டுள்ளனர். பின்னர் மாவட்ட குழந்தைகள்நல பாதுகாப்பு அலுவலர்களிடம் மீட்கப்பட்ட சிறுமியை ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது, விசாரணை செய்த அலுவலர்களுக்கு சிறுமி அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
அந்த வாக்குமூலத்தில், 2017ஆம் ஆண்டு முதல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உட்பட சில அதிமுக நிர்வாகிகள் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமி தரப்பில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளிக்கபட்டது. புகாரின் பேரில் விசாரித்த மகளிர் காவல் துறையினர் நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த நாஞ்சில் முருகேசனைப் பிடிக்க, காவல் துறையினர் ஐந்து தனிப்படைகளை அமைத்து தேடிவந்தனர். இந்நிலையில், நாஞ்சில் முருகேசனைத் தனிப்படை காவல் துறையினர், நெல்லை மாவட்டம் உவரியில் வைத்து கைதுசெய்து, அவரை நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்தனர்.