ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி உலகளவில் குழந்தைகள் மீதான வன்செயல் தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கன்னியாகுமரி அமைதி அறக்கட்டளை உளவியல் ஆலோசனை மையம் சார்பில், குழந்தைகள் மீதான பாலியல் வன்செயலை தடுப்பது குறித்த ஒரு நாள் பயிலரங்கம் கன்னியாகுமரியில் நடைபெற்றது.
இதில் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், சமூக சேவகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களுக்கு, பாலியல் வன்செயலில் இருந்து பெண் குழந்தைகளை, எவ்வாறு பாதுகாப்பது, போக்சோ சட்டம் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இது குறித்து கன்னியாகுமரி அமைதி அறக்கட்டளை உளவியல் ஆலோசனை மையத்தின் இயக்குநர் டாக்டர் ரத்தன ரூபா ராபின்சன், வேல்டு விஷன் இந்தியா நிர்வாகி வக்கீல் ஜெயபால் ஆகியோர் கூறியதாவது, நாட்டில் கடந்த 6 மாதங்களில் மட்டும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்செயல் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி-ஜூன் வரையிலான 6 மாதங்களில், தேசிய குற்ற ஆவண புள்ளி விவரப்படி 24,212 வழக்குகள் பதிவாகியுள்ளன.
மாதம் ஒன்றுக்கு நான்காயிரமும் நாளொன்றுக்கு 130 வழக்குகளும் பதிவாகி வருகின்றன. 15 நிமிடத்துக்கு ஒரு பெண் குழந்தைகள் பாலியல் வன்செயலுக்கு ஆளாகி வருகின்றனர். பொதுமக்கள் மத்தியில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்செயல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும் பெரும்பாலானோர் அது குறித்து வெளியே கூற முன் வருவதில்லை என்றனர்.
இதையும் படிங்க : பள்ளி, கல்லூரிகளில் பாலியல் விழிப்புணர்வு கல்வி தேவை - மாதர் சங்கம் வலுயுறுத்தல்