கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள விகவாசபுரம் அடுத்த பண்டாரபுரத்தை சேர்ந்தவர் அஜிதா(30). இவாது கணவர் அல்போன்ஸ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு காலமானார். இதனைத் தொடர்ந்து, அஜிதா தனது மகன் மற்றும் மகளுடன் மாமனார், மாமியார் மற்றும் 2 நாத்தனார்களுடன் வசித்து வந்தார்.
இதற்கிடையில், அஜிதாவின் நகைகளை வாங்கி அவரது நாத்தனார்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததுடன் மீதமிருந்த சொத்துக்களையும் விற்று விட்டு, அஜிதாவையும் வீட்டை விட்டு துரத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அஜிதா புகார் அளித்தார். அந்த புகார் மனு நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. உதவி ஆய்வாளர் சாந்தகுமாரி அப்புகாரினை விசாரித்து இருதரப்பினரையும் அழைத்து பேசியுள்ளார்.
அப்போது அஜிதா தனது 2 குழந்தைகளுடன் வீட்டு மாடியில் ஒரு அறை ஒதுக்கி அதில் வசிப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த அறையையும் காலி செய்து விட்டு, அவரை மாமியார் மற்றும் நாத்தனார் விரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அஜிதா ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர், அவரது வீட்டு முன் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இச்சம்பவம் தொடர்பாக ஆரல்வாய்மொழி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அன்புமணிக்கு பதிலடி; ஆதரவாளர்களுக்கு நன்றி - திருமாவளவன் ட்வீட்