பாஜகவின் வேல் யாத்திரை நாளை திருச்செந்தூரில் நிறைவடைகிறது. ஆனால் வேல் யாத்திரைக்கு காவல்துறை சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குமரி மாவட்டம் முழுவதிலும் உள்ள பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் வேல் யாத்திரை நிறைவு செய்வதற்காக திருச்செந்தூருக்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து குமரியில் இருந்து வேல் யாத்திரைக்குச் செல்லும் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை குமரி மாவட்டம் முழுவதும் உள்ள காவல் சோதனைச் சாவடிகள் மூலமாக தடுத்து நிறுத்தும் வகையில் காவல்துறையினர் சோதனை சாவடிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில் குமரி மாவட்டத்தின் எல்லை பகுதியான ஆரல்வாய்மொழி மற்றும் அஞ்சுகிராமம் சோதனைச்சாவடிகளில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் குமரி மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் அஞ்சுகிராமம் சோதனைச் சாவடிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். இதனால் அப்பகுதிகளில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது.