கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அழிக்கால் மீனவர் கிராமத்தில், கடந்த 22ஆம் தேதி கடல் சீற்றம் ஏற்பட்டது. அப்போது, கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் 100 வீடுகள் பாதிக்கப்பட்டன.
இதைத் தடுக்க ரூ.10 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என கடந்த ஆண்டு நாகர்கோவிலில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். ஆனால், இது வரையிலும் தூண்டில் வளைவு அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த கிராமத்தில் அடிக்கடி கடல் நீர் ஊருக்குள் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதைத் தொடர்ந்து, தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும், கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று மீண்டும் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு சுமார் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மீனவர்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். மேலும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காததால், ஊரையே காலி செய்து வெளியேறும் அவலநிலை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.