கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சில நாள்களாக கடல் சீற்றம் அதிகமாகவே காணப்படுகிறது.
மேலும் கடற்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது.
குறிப்பாக தேங்காய்பட்டணம் அருகே ஹெலன் நகர் பகுதியில் கடல் சீற்றத்தால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அலையால் சேதமடைந்துள்ளன.
அதே கிராமத்தில் உயிர் இழப்பவர்களை அடக்கம் செய்யும் கல்லறை தோட்டத்தையும் கடல் அலை விட்டுவைக்கவில்லை.
கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த பிணங்களை கடல் அலை இழுத்து சென்றதுடன், குடியிருப்புகளின் முன்புறம் நின்ற தென்னை உள்ளிட்ட மரங்களையும் வேரோடு சாய்த்துள்ளது.
இதனால் மீனவர்கள் குடியிருப்புகள், கல்லறை தோட்டம் பாதிக்காமல் இருக்க மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் உடனடியாக போர்க்கால அடிப்படையில் கடல் அலை தடுப்பு சுவர் அமைத்துத்தர மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்' - மீன்வளத்துறை எச்சரிக்கை