கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் பேரூராட்சி அலுவலகம் பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதனால், பேருந்து நிலையம் எப்போதும் மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக இருக்கும். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் மது போதையில் படுத்திருந்தார்.
மது போதை தீர்ந்ததும் மீண்டும் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்துவிட்டு முழு போதையில் வந்து பேருந்து நிலையத்தில் படுப்பதை இரண்டு நாட்களாக வாடிக்கையாக வைத்திருந்தார். இதையறிந்த அஞ்சுகிராமம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் முத்துராஜ், அங்கு சென்று டிப்டாப் ஆசாமியிடம் பேச்சுக் கொடுத்தார். அந்த நபர் வேலூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்தவர் என்பதும், மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் அரசு ஊழியர் தங்கம் என்றும் தெரியவந்தது. இவரது மனைவி நெல்லை மாவட்டம், பழவூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது மனைவி தற்காலிகமாக பழவூரில் தங்கி இருந்துள்ளார். அவரை பார்ப்பதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழவூருக்கு வந்துள்ளார்.
அப்போது இருவருக்கும் மீண்டும் கருத்து மோதல் ஏற்படவே, வாழ்க்கையில் விரக்தி அடைந்த தங்கம் அங்கிருந்து அஞ்சுகிராமம் வந்து வீட்டிற்கு செல்ல பிடிக்காமல் இரண்டு நாட்களாக மதுபோதையில் அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்தில் படுத்து இருந்துள்ளார்.
மேலும் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுக்க திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து பழவூர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டபோது, தங்கம் கூறிய தகவல் அனைத்தும் உண்மை என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தங்கத்திற்கு கவுன்சிலிங் அளித்த முத்துராஜ், அவருக்கு அறிவுரைகள் கூறி ஆட்டோ பிடித்து பழவூருக்கு பத்திரமாக அனுப்பி வைத்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தவறான முடிவுடன் வந்து முழுபோதையில் இருந்த அரசு ஊழியரை மீட்டு அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து பத்திரமாக அனுப்பி வைத்த மனிதநேய காவலர் முத்துராஜூக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.