கன்னியாகுமரி: பள்ளியாடி பகுதியில் அமைந்துள்ள பழைய பள்ளி திருத்தலமானது, சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதற்கு முன்பு இந்த ஆலயம் அமைந்திருக்கும் பகுதி காடுகள் நிறைந்ததாகவும், புலிகள் வசிப்பிடமாகவும் இருந்துள்ளது.
அந்த காலத்தில் ஒரு மடத்திற்கு சொந்தமாக இருந்த நிலத்தை ஒரு குடும்பத்தினர்
தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகவும், மேலும் அங்கிருந்த புளியமரத்தின் கீழ் செங்குத்தாக நின்ற கருங்கல்லில் அந்த குடும்பத்தினர் தீபம் ஏற்றி வழிபட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அம்மா, அப்பாவினை குறிக்கும் வகையில் அதற்கு அருகில் இன்னொரு கல்லையும் நட்டு, தீபம் எற்றி
வழிபட்டு வந்ததாக நம்பப்படுகிறது. அப்போது குமரி மாவட்டம், கேரள மாநிலத்துடன் இருந்ததால் மலையாள வார்த்தையில் அம்மையும், அப்பனும் என்று அழைக்கபட்டு வந்துள்ளது. அம்மாவும் அப்பாவும் சேர்ந்து பள்ளியாடி என்னும் ஊரில் காணப்பட்டதால் காலப்போக்கில், அது பள்ளியப்பன் என்றும்; பழைய பள்ளி என்றும் பக்தர்கள் அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் அந்த ஊர் பகுதியில் காலரா, வைசூரி போன்ற நோய்கள் மக்களை தாக்கி அதிகமான மக்கள் உயிரிழந்த நிலையில் பயந்து போன மக்கள் பள்ளியப்பனிடம் சென்று வழிபட்டுள்ளனர். உயிர்கள் பலியாவதை நிறுத்தினால் ஊருக்கெல்லாம் கஞ்சி காய்த்து ஊற்றுவதாக நேர்த்திக்கடனும் வைத்துள்ளனர். அதன்பின் வேண்டுதல் காரணமாக உயிர்கள் பலியாவது நின்றதால், மக்கள் தாங்கள் வேண்டியது போல கஞ்சி காய்த்து ஊற்றி வழிபட்டு வந்துள்ளனர். அன்று தொடங்கிய கஞ்சிதானம் இன்று அன்னதானமாக உருவெடுத்துள்ளது.
பழமை வாய்ந்த இந்த திருத்தலத்தில் இரு கல் விளக்குகளை முன்னோர்கள் ஏற்றிவைத்து ஏழைகளுக்கு உணவளித்து வழிபட்டு வந்ததைப் போல, இந்த திருத்தலத்தில் இப்போதும் வழிபட்டு வருகின்றனர். இந்துக்கள் திருவிளக்கேற்றியும், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், இஸ்லாமியர்கள் சாம்பிராணியை ஏற்றியும் அவரவர் விருப்பப்படி இறைவனை வணங்கி வருகின்றனர். இங்கு ஆண்டுக்கொரு முறை மார்ச் மாதம் மூன்றாம் திங்கள்கிழமை, மும்மத மக்களும் இணைந்து சர்வமத பிரார்த்தனை மற்றும் சமபந்தி விருந்து போன்ற நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வழக்கமான விழாக்கள் போல அல்லாமல் இங்கு அனைத்து மதங்களில் உள்ள மக்களும் காணிக்கையாக வழங்கும் அரிசி, காய்கறி மற்றும் பலசரக்கு பொருட்கள் போன்றவற்றால் மும்மதங்களைச் சார்ந்த அந்த வட்டார மக்களால் சமைக்கப்பட்டு, பல ஆயிரம் மக்களுக்கு சமபந்தி விருந்தாக உணவு பரிமாறப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறப்பு வாய்ந்த விழாவானது சர்வமத பிரார்த்தனை மற்றும் சமபந்தி விருந்து இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
சுமார் 500 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்விழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் உட்பட அனைத்து மதங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பெரும் திரளாகவும், ஒற்றுமையுடன் கலந்து கொண்டு உணவருந்திவிட்டு மகிழ்ச்சியுடன் சென்றனர். இதற்கு முன்தினம் மத நல்லிணக்கவிழாவும் இங்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.