கன்னியாகுமரி அரசு தோட்டக்கலைப் பண்ணை சுமார் 12.64 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. இங்கு காய்கறி, பழம், கீரைச் செடிகள் மற்றும் மரங்கள் உள்ளன. இங்கு விளையும் சப்போட்டா, முந்திரிப்பழம், பப்பாளி, நெல்லிக்காய், முருங்கைக்காய், கோவைக்காய், முருங்கைக்கீரை போன்றவை பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது கரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு காரணமாக இங்கே பயிரிடப்பட்ட காய்கறிகள், பழ வகைகள் மற்றும் கீரை வகைகள் விற்பனை செய்ய முடியாத சூழல் இருந்து வந்தது. தற்போது சந்தையில் பொதுமக்களுக்கு காய்கறிகள் பழவகைகள் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு விலையுர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படியும் தோட்டத்துறை மேலாண்மை இயக்குநர் சுப்பையன் அறிவுரையின்படியும் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டவற்றை டான்ஹோடா விற்பனை நிலையம் சார்பாக விற்பனை செய்யப்பட்டது.
அதன்படி, கன்னியாகுமரி சுற்றுச்சூழல் பூங்கா பகுதியில் தினமும் விற்பனை செய்யப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். பொதுமக்களுக்கு காய்கறிகள் பழவகைகள் நாட்டுக் கோழி முட்டைகள் பால் போன்றவை அரசு நிர்ணயித்த விலையில் கிடைக்கும் என அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை அரசு பழத்தோட்டங்கள் மூலமாக விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளனர்.