கன்னியாகுமரி மாவட்டத்தில், அரசு ரப்பர் கழகம் செயல்பட்டுவருகிறது. இதில் ரப்பர் பால் சேகரித்தல், ஒட்டுக்கரை சேகரித்தல், களப் பணிகளை செய்தல் உள்ளிட்ட பணிகளில் 3 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் சம்பள ஒப்பந்தம் முடிவடைந்து, புதிய ஒப்பந்தம் அமல்படுத்துவது தொடர்பாக அரசு ரப்பர் கழக நிர்வாகத்திற்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடந்துவந்தது. எனினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் நேற்று முதல் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, நாகர்கோவில் தொழிலாளர் துறை துணை ஆணையர் அலுவலகத்தில், ஆணையர் அப்துல் காதர் சுபையர் முன்னிலையில் 40ஆவது கட்டமாக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், அரசு ரப்பர் கழக நிர்வாகத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. அதில், சம்பள உயர்வு குறித்து முடிவெடுக்க கால அவகாசம் ரப்பர் கழக நிர்வாகம் தரப்பில் கேட்டகப்பட்டதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வருகிற 20-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.