கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் பேரணி நடத்திடத் தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், அந்த அமைப்பின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சில கட்டுப்பாடுகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் இதனை எதிர்த்து
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
மேலும் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறும் போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்துக் கூறப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சுமார் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த போலீஸார் அனுமதி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், அருமனை ஆகிய இரண்டு இடங்களில் தற்போது ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. நாகர்கோவிலில் நாகராஜாகோயில் திடலிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தில் சுமார் 1000 திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேளதாளங்கள் முழங்கு ஆர்எஸ்எஸ் கொடியினை ஏந்தி அணிவகுத்துச் சென்றனர்.
இந்த ஊர்வலம் நாகர்கோவிலின் மைய பகுதிகளான மணிமேடை, வேப்பமூடு, செட்டிகுளம் வழியாக இந்து கல்லூரி மைதானத்தில் வந்து நிறைவு பெற்றது. அதன் பின்னர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் ஊர்வலம் செல்லும் வழிகள் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஊர்வலத்தின் போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
அதாவது, ஊர்வலத்தின் போது தடை செய்யப்பட்ட அமைப்புகளைப் பற்றிப் பேசக் கூடாது, மதங்களைப் பற்றி ஜாதிகளைப் பற்றிப் பேசுவதோ அல்லது பாடல் பாடுவதோ கூடாது, மற்ற மதங்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது, போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு இன்றி ஊர்வலம் செல்ல வேண்டும் எனவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதே போலப் பேரணியும் அமைதியாக நடைபெற்றது.
இதையும் படிங்க: heatstroke: மகாராஷ்டிரா அரசு விழாவில் வெயில் தாக்கத்தால் 11 பேர் மரணம்!