கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தை செப்டம்பர் 2ஆம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்நிலையில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவின் பொருளாளர் அனுமந்த ராவ் மூத்த ஊழியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது அவர், "கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் நிறுவப்பட்டு செப்டம்பர் 2ஆம் தேதியுடன் 49 ஆண்டுகள் நிறைவடைந்து ஐம்பதாவது ஆண்டு தொடங்குகிறது. இந்தப் பொன்விழா கொண்டாட்டத்தை 2ஆம் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு 2020 செப்டம்பர் 2ஆம் தேதி வரை ஓராண்டு நிகழ்வாக நாடு முழுவதும் 'ஒரே பாரதம் வெற்றி பாரதம்' என்ற பெருவிழாவாக கொண்டாடுகிறோம்.
இந்த ஓராண்டு காலத்தில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் வரலாறு, உருவான விதம், உள்ளிட்டவை குறித்து தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் அச்சிடப்பட்டு முக்கிய சுற்றுலாப் பகுதிகளில் கையேடு வழங்கப்படும். இவற்றின் மூலம் நாடு முழுவதும் மட்டுமின்றி உலகளவில் விவேகானந்தர் நினைவு மண்டபம் பற்றிய தகவல் பரவலாக சென்றடையும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்தனர்.