கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் அண்மை காலங்களில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டு நடந்துவந்தது. இதை கண்டுபிடிக்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார். இதுதொடர்பாக, நாகர்கோவில் தனிப்படை போலீசார் பீச்ரோடு சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.
மேலும், அவர்கள் வந்த வாகனத்தை சோதனை செய்தபோது வாகனங்களை திருடும் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கபட்டது. அதுமட்டுமின்றி, இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் இருவரையும் கோட்டார் காவல் நிலையம் கொண்டுசென்று தீவிரமாக விசாரணை செய்தனர்.
அதில் அவர்கள் இருவரும் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த அகஸ்டின் இன்பராஜ் (47) மற்றும் மதுரையை சேர்ந்த பிரபாகரன் (36) என்பது தெரியவந்தது. இவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பூட்டாத இருசக்கர வாகனத்தை குறி வைத்து அவற்றை கார் உதவியுடன் திருடியதும், அவ்வாறு திருடிய பைக்கை காட்டு பகுதியில் சேகரித்து வைத்து பின்னர் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, இவர்களிடமிருந்து ஸ்கார்பியோ கார் மற்றும் இருசக்கர வாகனங்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து, நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த திருட்டில் தொடர்புடைய இரண்டு பேரை தேடிவருகின்றனர்.