கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமிர்தலால் புரோகித் என்பவர் தங்க நகை பாலிஷ் கடை நடத்திவந்தார். இவரிடம் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஷேக் முஸ்தபா என்பவர் வேலை பார்த்துவந்தார்.
இந்நிலையில், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு ஷேக் முஸ்தபா அவரது நண்பர்களுடன் சேர்ந்து தங்கநகை பாலிஷ் கடையிலிருந்து சுமார் 35 சவரன் தங்க நகைகளை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து கடையின் உரிமையாளர் காவல் துறையில் புகார் கொடுத்திருந்தார்.
காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர். இந்நிலையில் தனிப்படை ஆய்வாளர் லால் பகதூர் சாஸ்திரி, உதவி ஆய்வாளர் சரவணகுமார் உள்ளிட்ட தனிப்படையினர் மேற்கு வங்கத்தில் வைத்து ஷேக் முஸ்தபாவை கைதுசெய்தனர். மேலும் அவரிடமிருந்து சுமார் ஐந்தரை லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்செய்தனர். அவரை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கன்னியாகுமரிக்கு அழைத்துவந்தனர்.
இதனைத்தொடர்ந்து கோட்டார் காவல் நிலையத்தில் கொள்ளையடித்த நகை குறித்து ஷேக் முஸ்தபாவிடம் தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது.