கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகர எல்லை பகுதியில் புத்தேரி குளம் உள்ளது. இந்த குளக்கரை ஓரம் உள்ள கலுங்கடி ஊர் கல்லறைத் தோட்டத்தில் உயிரிழந்தவர்களின் கல்லறைகள் உள்ளன. இதில் மூதாதையர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அப்பகுதி மக்கள் வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்தும் ஒப்பந்ததாரர்கள், கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து இந்த கல்லறையில் கொட்டிவருகின்றனர். இதனால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான கிராம மக்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று இந்த குளத்தில் தினமும் ஏராளமானோர் குளித்து வருவதால் அவர்களுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இப்பகுதியில் வரும் கழிவு லாரிகளை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக கலுங்கடி கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: கையை நீட்டினால் சானிடைசர் வரும்: ரோபோ மூலம் கரோனா பரிசோதனை!