கன்னியாகுமரி: நாகர்கோவில், கணேசபுரம் காவல் குடியிருப்பு அருகே வசித்து வந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சிவதாணு (75). இவருடன் அவரது சகோதரியின் தனது மகன் விக்னேஷ் ராமும் (35) வசித்து வந்தார்.
இந்நிலையில், தனது தாய் மாமன் சிவதாணுவிடம், விக்னேஷ் ராம் அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். அவரும் தன்னால் முடிந்த தொகையை அடிக்கடி கொடுத்து உதவியுள்ளார்.
அந்த வகையில், வழக்கம்போல் இன்று (ஜூலை14) காலை மீண்டும் விக்னேஷ் ராம் அவரிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது சிவதாணு தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் ராம் அவரை மிதித்துக் கீழே தள்ளியுள்ளார்.
தொடர்ந்து, ஆத்திரத்தில் சிவதாணுவின் தலையில் விக்னேஷ் ராம் மிதித்துள்ளார். இதில் 75 வயதான சிவதாணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து இந்தத் தகவலை தனது தாயாரிடம் விக்னேஷ் ராம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் ராமின் தாய் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கோட்டார் காவல் துறையினர், சிவதாணுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் ராமை விசாரித்து வருகின்றனர். மேலும், விக்னேஷ் ராம் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: என்னது கொங்கு நாடா? நல்லா தான போயிட்ருக்கு: வடிவேலு