குமரி மாவட்ட ஓய்வுபெற்ற காவலர்கள் நலச்சங்கம் சார்பில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்ற ஓய்வுபெற்ற காவலர்கள் கூறியதாவது:-
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார். அதில் சீருடை பணியாளர்கள் அமைச்சுப் பணியாளர்களுக்கு சல்யூட் செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சு பணியாளர்கள் சங்கம், காவல் கண்காணிப்பாளருக்கு கண்டனம் தெரிவித்ததோடு இந்த உத்தரவைப் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.
காவல் துறையில் பணியாற்றிக் கொண்டே காவல்துறைக்கு எதிராக செயல்படும் அமைச்சுப் பணியாளர்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும், இவ்வாறு கண்டன தீர்மானம் நிறைவேற்றிய அமைச்சுப் பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.