கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தேர்தலுக்கான பிரஜைகள் அமைப்பின் நிர்வாகிகளான முன்னாள் ஐஏஎஸ் அலுவலர்கள் தேவசகாயம், சசிகாந்த் செந்தில், ராம்பிரகாஷ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது தேவசகாயம் கூறுகையில், "தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் சேர்ந்து நடைபெறுகிறது. இவிஎம் சிஸ்டம் ஜனநாயகத் தேர்தலுக்குத் தகுதியற்றது.
இயந்திரம் மூலம் போடப்படும் வாக்கு சரியாக எண்ணப்படுகிறதா என்பதும் எனக்குத் தெரியாது. வாக்குச்சீட்டில் நாம் ஓட்டுப் போடுவோம். வாக்கு எண்ணும்போது நமது வாக்குகளைக் கண்காணிக்க முகவர்கள் இருப்பார்கள். ஆனால் இவிஎம் மிஷினில் ஓட்டுப்போடும் வாக்காளனை குருடன் ஆக்குகிறார்கள்.
ஓட்டு எண்ணும்போதுதான் குழறுபடி, ஊழல் நடக்கிறது. ஏப்ரல் 6ஆம் தேதி ஓட்டுப்பதிவு, மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அவ்வளவு நாள்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. கள்ள நோட்டு போன்று இது கள்ள ஓட்டு. நான் ஓட்டு போடுவது ஒன்று, நீங்கள் எண்ணுவது மற்றொன்று. விவி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும்.
மக்கள் மத்தியில் சந்தேகம் வந்தாலே அதைத் தீர்த்துவைப்பது தேர்தல் ஆணையத்தின் வேலை. எனவே விவிபேட் ரசீதுகளை எண்ண வேண்டும். ஜனநாயக நடைமுறைக்கு இது சரியான சிஸ்டமா எனத் தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் விவிபேட்டில் வரும் எல்லா வாக்குப்பதிவு ரசீதையும் எண்ண வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை வரும்" என்று கூறினார்.