மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரி மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் உள்ள இளங்கடை சந்திப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையேற்று சிறப்புரையாற்றினார். இப்போது கூட்டத்தில் பேசிய அவர், 'குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக கொண்டு வந்துள்ள இந்தச் சட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற குமரி சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும்’ என வலியுறுத்தினார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த திருமுருகன் காந்தி, ' பொதுமக்கள் ஜனநாயக வழியில் போராடும் உரிமையை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. அரசு போராட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். காட்டுமிராண்டித்தனமாக காவல் துறையை வைத்து தாக்கும் சம்பவம் கண்டனத்துக்குரியது' எனத் தெரிவித்தார்.
'தமிழ்நாடு சட்டமன்றத்தில் என்.ஆர். சி., , என்.சி.ஆர்., சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் இயற்ற வேண்டும். இல்லை எனில் போராட்டம் மேலும் தீவிரமடையும். போராட்டத்தை கண்காணிக்க காவல் துறை அதிகாரிகளை நியமனம் செய்வது ஜனநாயக விரோத நடவடிக்கை’ எனக் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ' கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடியில் பெட்ரோல் மண்டலம் அமைக்கப்படும் என கூறியிருப்பதால், அங்குள்ள நீர், நிலம், சுற்றுச்சூழல் முற்றிலும் மாசுபடும். விவசாயம் அழியும். கடல்வளம் பாதிப்படையும். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், 2000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அரசு கூறி வரும் நிலையில் பல லட்சம் பேர் இந்தத் திட்டத்தினால் பாதிக்கப்படுவார்கள்' எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிக்கிறோம் என அதிமுக அரசு அறிவித்துள்ளது. ஆனால், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்தியஅரசு ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்தவில்லை என்றால், வேளாண் பாதுகாப்பு மண்டல அறிவிப்பு வெறும் கண்துடைப்பு நாடகம்' என திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ - அரிவகை மூலிகை மரங்கள் எரிந்து நாசம்