கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மனித பாதுகாப்பு கழகம் சார்பில் கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும், அதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. மனித பாதுகாப்பு கழக நிறுவனர் டாக்டர் ஜெயமோகன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து டாக்டர் ஜெயமோகன் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டம் இந்தியாவின் தென்கோடி எல்லைப்பகுதி ஆகும். சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் குமரிக்கு வெளிநாடுகளிலிருந்தும் இந்தியாவின் பிற பகுதியிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இவர்கள் எளிதாக வந்து செல்வதற்கு ஏற்றவாறு குமரி மாவட்டத்தில் விமான நிலையம் ஏதும் இல்லை.
இதனால் குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. எனவே, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதனை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதனை வலியுறுத்தி, மனித பாதுகாப்பு கழகம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் அலுவலர்களை சந்தித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி மந்தமாக நடைபெற்றுவருகிறது. எனவே, குமரி மாவட்டத்தில் உடனடியாக விமான நிலையம் அமைக்க வலியுறுத்தியும் அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்த கோரியும் ஒரு லட்சம் கையெழுத்து பெற்று மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ’ஹஜ் பயணத்திற்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும்’ - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்