தமிழ்நாட்டின் பெரும்பகுதி மக்கள் பயன்படும் வகையில் நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை வழியாக கன்னியாகுமரி - திப்ருகார் ரயிலை இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலத்தில் திப்ருகார் என்ற இடத்திற்கு 2011ஆம் ஆண்டு முதல் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இந்தியாவிலேயே அதிக தூரம் இயக்கப்படும் ரயில் ஆகும். இந்த ரயில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோயம்புத்தூர், சேலம் வழியாக கேரளாவிலுள்ள பணிகளுக்காகவே இயக்கப்படுகின்றது.
திருவனந்தபுரம் ரயில்வே நிலையத்தில் இட நெருக்கடியை சமாளிப்பதற்காக இந்த ரயிலை நாகர்கோவிலுக்கு அனுப்பி இங்கு நிறுத்திவைத்து பராமரிக்கப்படுகிறது. திருநெல்வேலியும், கன்னியாகுமரியும் கேரளாவுக்கு ஒரு ரயில் டம்பிங் ஸ்டாண்ட் ஆக மட்டுமே பயன்படுகிறதே தவிர தமிழ்நாட்டுக்கு அது ரயில்வே முனையமாக பயன்படுவதில்லை.
இந்த ரயிலை நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வழியாக இயக்கி விட்டு வேறு புதிய ரயில்களுக்கு நாகர்கோவிலில் இருந்து இயக்க இடம் இல்லாதபடி செய்து விடுகின்றனர். மேலும் இந்த ரயில் கேரளா வழியாக செல்வதால் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் இந்த ரயிலில் பயணிப்பது தவிர்க்கின்றனர்.
எனவே கன்னியாகுமரி - திப்ருகார் ரயிலை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக மாற்றி இயக்க வேண்டும். இவ்வாறு சென்னை வழியாக இந்த ரயிலை இயக்கும் பட்சத்தில் சுமார் 200 கிலோமீட்டர் சுற்றி செல்வது தவிர்க்கப்படுவதுடன் இதற்கான கட்டணமும் குறையும். மேலும், குறைந்த பயண நேரத்தில் வடகிழக்கு மாநிலங்களை சென்றடைய முடியும்.
தமிழ்நாட்டின் பெரும் பகுதி பயணிகளுக்கு பயன்படும் வகையில் மாநிலத்தின் தலைநகர் சென்னை வழியாக இயக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.