குமரி மாவட்ட எல்லையான பத்துகாணி காளி மலையில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் துர்காஷ்டமி திருவிழா இன்று தொடங்கி 8ஆம் தேதி வரை ஆறு நாட்கள் நடக்கிறது. இதையொட்டி கன்னியாகுமரியிலிருந்து காளி மலைக்குப் பக்தர்கள் இருமுடி கட்டி, புனித நீர் சுமந்து பயணமாகப் புறப்பட்டுச் சென்றனர். இந்தப் பயணத்துக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட அம்மன் ரதம் சென்றது.
இதன் தொடக்கவிழா இன்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் முன்பு காலை 8 மணிக்கு நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். காளிமலை அறக்கட்டளை துணைத் தலைவர் ஸ்ரீகுமார் முன்னிலை வகித்தார். வெள்ளி மலை இந்து தர்மபீடம் அமைப்புத் தலைவர் சைதன்யானந்த மகராஜ் ஆசியுரை வழங்கினார்.
இந்தப் புனித பயணத்தை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் கொடியசைத்து தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். இந்தப் பயணம் கோட்டார், மீனாட்சிபுரம், ஒழுகினசேரி, வடசேரி வழியாக ஐந்தாம் தேதி பத்துகாணி காளிமலை பத்திரகாளி அம்மன் கோயிலை சென்றடைகிறது. இந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.