குமரி மாவட்டம், படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, உறவினரின் பிரசவத்திற்காக அருகிலுள்ள மருத்துவமனையில் தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது, அதே மருத்துவமனையில், கேரள மாநிலம், கொல்லம் இடாவாஞ்சேரியைச் சேர்ந்த ரிஜினும் தங்கியிருந்து, தனது உறவினரை கவனித்து வந்துள்ளார்.
அப்போது இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, ரிஜின் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இந்த விவகாரம் அப்பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இது குறித்து ரிஜினிடம் சென்று, தனது மகளை பதிவுத்திருமணம் செய்து கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர். அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரைத் தகாத வார்த்தைகளால் பேசி, இருவரும் ஒன்றாக இருந்த படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதாக ரிஜின் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், குழித்துறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.இதுதொடர்பாக ரிஜினை தேடிவந்த காவல்துறையினர், செல்போன் சிக்னல் உதவியுடன் கேரள மாநிலம், கொல்லத்தில் வைத்து கைது செய்தனர்.
விசாரணையில் ரிஜினுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும், முதல் திருமணத்தை மறைத்து கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.