கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் குளம், கால்வாய்களை பொதுமக்களே இணைந்து தூர் வாருவதற்கு வசதியாக இலவச ஜேசிபி இயந்திரம் வழங்கும் திட்டத்தை இன்று நாகர்கோவிலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வசந்தகுமார் கூறியதாவது:
"உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் என்பது அரசு தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செய்யும் துரோகமாகும். நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள், மாநகராட்சி மேயர் பதவிகளை மக்கள் தேர்ந்தெடுக்கும் உரிமையை தட்டிப் பறிக்கும் முயற்சியில் இந்த அரசு இறங்கியுள்ளது. மேலும் இது ஜனநாயக படுகொலையாகும்.
இதனால் பணபலம் உள்ளவர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும் என்ற நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருவது கண்டிக்கத்தக்கது. இந்த அரசில் ஒவ்வொரு ஒப்பந்தங்களையும் எடுப்பதற்கு லஞ்சம் பெற்ற பணத்தை, இந்த உள்ளாட்சித் தேர்தலில் செலவு செய்யத் தயாராக வைத்துள்ளனர். இதன் மூலம் குதிரை பேரம் நடத்துவார்கள்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ள அதிசயம் என்பது தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை அகற்றி விட்டு காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி அமையும் என்பது தான். ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சேர மாட்டார்கள் என்று கூறமுடியாது. அவர்கள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுவது குறித்து தேர்தல் நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரியும்தான் முடிவு செய்வார்கள்" இவ்வாறு கூறினார்.
மேலும் படிக்க: ரஜினியும், கமலும் இணைந்தால்...! அமைச்சர் நறுக் பதில்...!