கன்னியாகுமரி: பணியின்போது கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழந்த பொதுப்பணித் துறை அலுவலரின் உடலை நீண்டநேரம் போராடி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
முதல் பருவ நெல் சாகுபடி பணிகளுக்காக சில நாள்களுக்கு முன் பேச்சிப்பாறை அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் வழக்கமாக நீரை திறப்பதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மாதத்திற்கு முன் கோடை காலத்தில் ஆறுகள், கால்வாய்கள், குளங்களை தூர் வாருவது வழக்கம்.
இந்தமுறை தூரவாரும் பணிகளில் பொதுப்பணித் துறையினர் ஈடுபடவில்லை. இந்நிலையில் திறக்கப்பட்ட நீர், கால்வாய்களின் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு கடைமடை வரை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் நாகர்கோவிலை அடுத்துள்ள தோவாளை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்ட நாகர்கோவில் பொதுப்பணித் துறை ஆய்வாளர் ராஜேந்திரன் கால்வாயில் வந்த நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுப்பணித் துறை அலுவலர் ஒருவர் கால்வாயில் மூழ்கிய சம்பவம் குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீண்டநேரம் போராடி தீயணைப்புத் துறையினர் அவரது உடலை மீட்டனர். இந்தச் சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.10 லட்சம் மதிப்பிலான கார் பரிசு: ஆசைவார்த்தை காட்டி மோசடி செய்த ஆசாமி