வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றிரவு புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு புரெவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.30 மணி நிலவரப்படி புரெவி புயல் பாம்பனுக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கே 700 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இப்புயல் 6 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து இன்று மாலை அல்லது இரவில் இலங்கையின் திரிகோணமலை அருகே கரையைக் கடக்கிறது. இதன் காரணமாக தென் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து புரெவி புயல் மீட்பு நடவடிக்கைக்காக தேசிய பேரிடர் மற்றும் மீட்பு படையைச் சேர்ந்த 20 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வந்தடைந்தது. நவீன மீட்பு படகுகள் மற்றும் உபகரணங்களுடன் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கியிருந்த தேசிய பேரிடர் மற்றும் மீட்புப் படையினரில் ஒரு பிரிவினர் இன்று கன்னியாகுமரி வந்தடைந்தனர்.
அவர்கள் தற்போது கன்னியாகுமரியில் முகாமிட்டு கடற்கரை பகுதிகளில் தயார்நிலையில் உள்ளனர். அவர்களுக்கு உயர் அலுவலர்கள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: புரெவி புயல்: தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 40 பேர் தூத்துக்குடி வருகை!