கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். இவர் மதிமுக, அதிமுக, அமமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்துவிட்டு தற்போது இலக்கியப் பேச்சாளராக வலம்வந்து-கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இன்று காலை கன்னியாகுமரியில் உள்ள அவரது இல்லத்தில் புதுச்சேரி தவளைகுப்பம் உதவி ஆய்வாளர் இளங்கோ தலைமையில் காவலர்கள் அவரைக் கைதுசெய்ய முயன்றனர்.
ஆனால், நாஞ்சில் சம்பத் காவல் துறையினருடன் செல்ல மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் தனது வழக்குரைஞரிடம் சட்ட ஆலோசனைகள் கேட்ட பிறகுதான், காவல் துறையினருடன் செல்வது குறித்து முடிவெடுக்க முடியும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை அறிந்த அவரது ஆதரவாளர்கள் நாஞ்சிலின் இல்லத்தில் குவியத் தொடங்கினர்.
இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது (2019 மார்ச் 27ஆம் தேதி) புதுச்சேரியில் வைத்தியலிங்கத்தை ஆதரித்து பரப்புரைசெய்தார். அப்போது, அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புதுச்சேரி உள் துறைச் செயலர் சுந்தரேசன் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின்பேரில், மூன்று பிரிவுகளின்கீழ் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குத் தொடர்பாக அழைப்பாணை அனுப்பியும் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால் கைதுசெய்ய-வந்ததாகப் புதுச்சேரி காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நாஞ்சில் சம்பத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே, தனது வழக்குரைஞரைச் சந்திக்க காரில் கிளம்பியுள்ளார் நாஞ்சில் சம்பத். இருப்பினும் அவரை கைதுசெய்யும் முடிவிலிருந்து காவல் துறையினர் பின்வாங்குவதாகத் தெரியவில்லை.
இதையும் படிங்க: கோவிட் 19: கோமியம் அருந்தி குமட்டல், வாந்தி - பாஜக உறுப்பினர் கைது!