கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாலைகளை சீரமைக்க அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது என்ற அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இருப்பினும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கேரள மாநில எல்லையான களியக்காவிளை வரை உள்ள சாலைகள் போக்குவரத்திற்கு தகுதியற்ற சாலைகளாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுங்கான் கடை முதல் தக்கலை வரை உள்ள சாலைகள் ஆங்காங்கே பழுதடைந்து காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.
இதேபோன்று நாகர்கோவில் அருகே தடிக்காரன்கோணத்தில் இருந்து கீரிப்பாறை செல்லும் சாலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்குச் சாலைகள் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கீறிப்பாறை, காளிகேசம், மாறாமலை, போன்ற பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான ரப்பர் தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை சிதிலமடைந்து காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள், வாகன் ஓட்டிகள், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இந்த பகுதி, வனப்பகுதிக்கு மிக அருகில் இருப்பதால் கரடி, சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட வனவிலங்கு வாகன ஓட்டுநர்களை தாக்கும் அபாயமும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சாலை வழியாக பல்வேறு ஆய்வு பணிக்காக அமைச்சர்களும் ஆட்சியர்களும் அடிக்கடி சென்று வந்தாலும் கூட, இந்த குண்டும் குழியுமான சாலை அவர்களின் கண்ணில் படவில்லையா? என அப்பகுதி பொதுமக்கள் வேதனைப் பட தெரிவித்துள்ளனர். இதைச் சீரமைத்துத் தர வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 3 கோடியே 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் பணிகள் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. ஆட்சி மாறி மூன்று ஆண்டுகள் ஆகியும் காட்சிகள் மாறாத நிலையே இந்த பகுதிகளில் தொடர்வதாக மக்கள் கூறுகின்றனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக அடுத்த மாதம் இந்த வழியாக எந்த வாகனங்களையும் அனுமதிக்காமல், சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் இருக்கப் போவதாக தடிக்காரண்கோணம் பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி..மெரினா கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர்!