மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேனி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக, மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் போடி சாலையில் கண்டன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்திருந்தனர்.
இந்நிலையில், (அக். 19) இன்று காலை 200-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்திற்காகத் திரண்டனர். தடையை மீறி டிராக்டர்களில் வேளாண் சட்டங்களைக் கண்டித்து பேரணியாகச் செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் நடைபெற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் காங்கிரஸ் தொண்டர்களுடன் கே.எஸ். அழகிரி சாலை மறியலில் ஈடுபட்டார். அவரையும் காங்கிரஸ் தொண்டர்களையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இந்நிலையில் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் தொண்டர்களை விடுவிக்கக் கோரி கன்னியாகுமரி ராஜிவ்காந்தி சிலை முன்பு திடீரென காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அழகிரியின் கைதை கண்டித்தும், மத்திய மாநில அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: விவசாயிகள் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு - காவல் துறையை எச்சரிக்கும் கே.எஸ். அழகிரி