கன்னியாகுமரி: களியக்காவிளை அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனிடிக் ஆண்டோ. அழகியமண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்த பெனிடிக் ஆண்டோவிற்கும், காட்டாத்துறை அருகே பிலாவிளை பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவனான ஆஸ்டின் ஜினோ என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதன் பேரில் பெனிடிக் ஆண்டோ கொல்லங்கோடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஆஸ்டின் ஜினோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஆஸ்டின் ஜினோவின் தாயார் மினி அஜிதா நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளித்ததோடு, பாதிரியாருக்கு எதிராக ஏராளமான பெண்களிடம் ஆபாச சாட்டிங் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், தடயங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை சமர்ப்பித்தார்.
இதனிடையே பாதிரியார் பெனிடிக் ஆண்டோவின் ஆபாச படங்கள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. தேவாலயதிற்கு வரும் பெண்களுக்கு பெனிடிக் ஆண்டோ செல்போன்களில் அனுப்பிய மெசேஜ்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் தேவாலயதிற்கு பிரார்த்தனைக்கு வந்து சென்ற பெண்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் மினி அஜிதா கூறுகையில், "பிலாங்காலை பகுதியில் பாதிரியாராக பணிபுரிந்து வந்த பெனிடிக் ஆண்டோ அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவியிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாகவும், தனது மகன் அதை தட்டிக் கேட்டதால் எழுந்த பிரச்சனையில் தனது மகன் ஆஸ்டின் ஜினோ மீது பொய் புகார் அளித்து போலீசார் மூலம் கைது செய்துள்ளனர். மேலும், நிரபராதியான தனது மகனுக்கு நியாயம் வழங்க வேண்டும் என காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து, ஆபாச செயல்களில் ஈடுபட்டு வந்த பெனிடிக் ஆண்டோ மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளதாக” கூறினார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து ஒரு மாணவி கூறுகையில், ”குலசேகரம் அருகே உள்ள தேவாலயத்தில் பெனிடிக் ஆண்டோ
பாதிரியாராக பணிபுரிந்த போது தானும் அந்த தேவாலயத்திற்கு வாரந்தோறும் சென்று வந்ததாகவும், அப்போது ஏற்பட்ட அறிமுகத்தை பயன்படுத்தி தன்னை செல்போனில் தொடர்பு கொண்டு அவ்வப்போது பேசி வந்ததாகவும், இந்நிலையில் நாட்கள் செல்ல செல்ல ஆபாசமாக பேசுவது, தனது ஆபாச படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்புவது, தனியாக அழைப்பது, இரவு நேரங்களில் தொடர்பு கொள்ள முயற்சிப்பது என தொடர் தொல்லையாக மாறியதாகவும், அவர் தவறான பார்வையோடு அணுகியதை புரிந்து கொண்டு முற்றிலுமாக அவரிடம் பேசாமல் தவிர்த்ததாகவும்” தெரிவித்தார். பாதிரியார் பெனிடிக் ஆண்டோ தன்னை மட்டும் இன்றி பல பெண்களோடும் ஆபாசமாக பேசி பழகி வந்தது அதன் பின்னர் தெரிய வந்ததாகவும் கூறினார்.
பாதிரியார் பெனிடிக் ஆண்டோ பல பெண்களிடம் ஆபாசமாக பேசிய வாட்ஸ் அப் ஷேட்டுகள், ஆபாச புகைப்படங்கள் 'பாவமன்னிப்பு பரிதாபங்கள்' என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரவியது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பாதிரியார் பெனிடிக் ஆண்டோ மீது மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.