’தமிழ்நாடு வளர்ச்சி பெறக்கூடாது என்று ஒருசிலர் செயல்படுகின்றனர்’ - பொன்.ராதாகிருஷ்ணன் - முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி: தமிழ்நாடு வளர்ச்சி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் ஒரு சில அரசியல் கட்சியினர் செயல்படுவதாக பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று (ஜூலை 27) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் அப்துல் கலாமின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ”தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எந்தத் திட்டமும் வரக்கூடாது என ஒரு கூட்டம் செயல்படுவதால், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கான திட்டங்கள் வராமல் போகிறது. விவசாய வளர்ச்சிக்கான திட்டங்களும் வரவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துறைமுகத் திட்டத்தை தொடங்கி இருந்தால், தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை வரையிலான மாவட்டங்களில் பல புதிய தொழிற்சாலைகள் உருவாகி இருக்கும். பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இந்தத் திட்டத்தை அழித்த பெருமை ஒரு சில சுயநல அரசியல்வாதிகளையும், ஒரு சில மதத் தலைவர்களையும் சாரும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இளம்பெண்களை சீரழித்த காசி தொடர்பான வழக்கில் காலக்கெடு நிர்ணயித்து விரைந்து விசாரணை மேற்கொண்டு, உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டும். சாத்தான்குளம் விவகாரத்திலும் வழக்குக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தண்டனை அளிக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்”. இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க:காசி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!