கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். காதலனுடன் சென்ற சிறுமியை மீட்டுத் தருமாறு பெற்றோர் கோட்டார் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதனடிப்படையில் காவல்துறையினர் இருவரையும் பிடித்து விசாரணை நடத்திய பின்பு, இளைஞரிடமிருந்து சிறுமியை மீட்டு, குழந்தைகள் நல குழு அலுவலர்களிடம் ஆஜர்படுத்தினர்.
அங்கு வந்த சிறுமி, கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் உள்பட சிலர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்படி, நாஞ்சில் முருகேசன் மீது காவல்துறையினர் போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையறிந்த நாஞ்சில் முருகேசன் தற்போது தலைமறைவானார். பின்னர், தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாகியுள்ள நாஞ்சில் முருகேசனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில், நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டை காவல்துறையினர் சுற்றி வளைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், நாஞ்சில் முருகேசன் நேற்று (ஜூலை 27) அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஊழியர்களுக்கு கரோனா: கோவில்பட்டி நீதிமன்றம் மூடல்