குமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த வெட்டூர்ணிமடம் பகுதியிலுள்ள கேசவ திருப்பால்புரத்தைச் சேர்ந்தவர், கணேஷ் (39). இவர், புகைப்படக்கலைஞராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (31). இவர்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கணவனும், மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, திடீரென கணேஷ் கட்டிலிலிருந்து தவறி விழுந்து, தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாக அவரது மனைவி கூறினார். இதையடுத்து உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு நினைவு திரும்பாமல் இருந்ததால் மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. இதைத் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகிறார். இதுகுறித்து உறவினர்கள் அளித்தப் புகாரின் பேரில் வடசேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கணேஷின் தம்பி சுரேஷ் கூறுகையில், "கணேஷ் வீட்டில் உள்ள கட்டிலிலிருந்து கீழே விழுந்ததால், இந்த அளவுக்கு காயம் ஏற்படாது. மேலும் அவர் கொடூரமாக தலையில் தாக்கப்பட்டு மண்டை ஓடு சேதமாகியுள்ளது.
அவரது விலா மற்றும் ஆண் உறுப்பு போன்றவற்றில் பலமான அடி விழுந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் வீடுபுகுந்து தாக்கியதால் தான் இந்த காயம் ஏற்பட்டிருக்க வேண்டும். இதன் பின்னணியில் மிகப் பெரிய சதி இருப்பதாக சந்தேகிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து கோமா நிலைக்குச் சென்று திரும்பிய கணேஷிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார். எனவே, இந்த விடயத்தில் உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.