கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம், மாமூடு பகுதியைச் சேர்ந்தவர் மந்திரவாதி சதீஷ். இவர் பில்லி சூனியம், ஏவல், தோஷம் கழிப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுவதாகக்கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்துள்ளார்.
இந்நிலையில் அரசியல் பிரமுகர் ஒருவர் தோஷம் கழிப்பதற்காக அந்த மந்திரவாதியை நாடியுள்ளார். அப்போது பசுக்கன்று ஒன்றை பலி கொடுக்க வேண்டும் என மந்திரவாதி தெரிவித்துள்ளார்.
உடனே அவரும் மந்திரவாதி கேட்டபடி பசுக்கன்றை கொடுத்துள்ளார். பின்னர் மந்திரவாதியைப் பற்றி உள்ளூரில் சிலரிடம் அரசியல் பிரமுகர் விசாரித்தபோது, அவர் இது போன்று பலரிடம் பசுக்கன்று, கோழி உள்ளிட்டவற்றைப் பெற்று சந்தையில் அவற்றை விற்று வருகிறார் எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அரசியல் பிரமுகர், மந்திரவாதியை தொடர்பு கொண்டு கடிந்துள்ளார். அதில் பயந்துபோன மந்திரவாதி பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்துடன் தலைமறைவாகியுள்ளார்.
இதனிடையே அவரது வீட்டில் கட்டி வைத்திருந்த பசுக்கன்று ஒன்று குடிநீரும் உணவுமின்றி உயிரிழந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து காவல் துறையினர், பேரூராட்சி ஊழியர்கள் உதவியுடன் அந்த பசுக்கன்றின் உடலை மீட்டு புதைத்ததோடு, அந்தப் பகுதியில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தினர்.
மேலும், அரசியல் பிரமுகர் புகார் அளிக்காத நிலையில் காவல் துறையினர் தரப்பிலிருந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆள்மாறாட்டம் செய்து நிலமோசடி - இரண்டு பெண்கள் கைது