"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற பெயரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று(பிப்.7) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
இதற்காக நாகர்கோவில் மாநகரம் முழுவதும் சாலையின் இருபுறமும் திமுக கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இதனிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போக்குவரத்தை சீர் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியில் விதிமுறைகளை மீறி திமுக கொடிகளை அக்கட்சியினர் பறக்க விட்டிருந்தனர்.
இந்த கொடிகளை, பாதுகாப்பு பணிக்கு வந்த காவல் துறையினர் அகற்ற முயன்றபோது அங்கு வந்த திமுக மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் சட்டப்பேரவை உறுப்பினருமான சுரேஷ் ராஜன், காவல் துறையினரை ஆபாச வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இதனைத் தொடர்ந்து இன்று (பிப். 07) நேசமணி நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலர் ஜயப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில். நாகர்கோவில் திமுக எம்எல்ஏ சுரேஷ் ராஜன் மீது, காவல் துறையினரை பணி செய்ய விடாமல் வரம்பு மீறி பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.