ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் ரகுபதி(51). இவர் கடந்த 2012ம் ஆண்டு தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றினார்.
அப்போது தென்தாமரைகுளத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் மாசானமுத்து என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஜான் தேவ சிங் என்ற மகேஷ் மீது ஒரு புகார் அளிக்க வந்துள்ளார். அதற்கு உதவி ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ஜான் தேவ சிங்கிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஜான் தேவ சிங், உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கிய போது அதனை வீடியோ எடுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார். இதனை விசாரணை செய்த நீதிபதி இது தொடர்பாக விசாரணை நடத்த குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில் உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கியது உண்மை என தெரிய வந்தது. பின்னர் இவ்வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி அருணாசலம் உதவி ஆய்வாளர் ரகுபதிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பினைத் தொடர்ந்து அவர் அதனை பொருட்படுத்தாமல் சிரித்துக் கொண்டே சிறைக்குச் சென்றார்.
இதையும் படிங்க: நிலப்பிரச்னை: புகார் அளித்தவரை தாக்கிய காவல் ஆய்வாளர்!