கன்னியாகுமரி: மாவட்டத்தில் வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பத்மகுமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
"தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு காலத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு, அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதி பெற்று, விழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த சுபநிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய செல்லும் வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்கள் அரசின் கரோனா கால வழிமுறைகளை பின்பற்றியே தொழில் செய்து வருகின்றனர்.
வீடியோ கலைஞர்கள் பணி முடிந்து திரும்பும்போது, தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். மாதத்தில் சொற்ப சுபமுகூர்த்த நாள்களை நம்பியே தொழில் நடத்தி வருகிறோம்.
அதன் மூலம் வரும் சொற்ப வருமானத்தில் தான் இந்தத் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான வீடியோ கலைஞர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது. ஆகவே, வீடியோ தொழில் கருவிகளுடன் பணிக்குச் சென்று திரும்பும் தொழில்முறை வீடியோ, புகைப்பட கலைஞர்களை மாவட்டத்திற்குள் பயணம் செய்ய அடையாள அட்டைகளை பரிசீலனை செய்து அனுமதிக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் கனமழை: மலைப்பகுதிகளில் நீர்வரத்து அதிகரிப்பு