குமரி மாவட்ட அழிக்கால் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் தொடங்க நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சியில் மாவட்ட செயலாளர் ஸ்பெல் பெல்வின் ஜோ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அந்த மனுவில், ” கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உட்பட்ட மீனவ கிராமங்கள் தொடர்ந்து கடல் சீற்றத்தால் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டிருப்பதை தாங்கள் அறிவீர்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அழிக்கால் கடற்கரை கிராமத்தில் கடல் சீற்றத்தால் கடல் நீர் ஊருக்குள் வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆண்டுதோறும் கடல் சீற்றத்தால் கடற்கரையில் மணல் அரிப்பு அதிகரித்து கடந்த இரு ஆண்டுகள் பல மீனவர் குடியிருப்புக்குள் கடல் நீர் புகுந்து வீடுகள் மணலால் நிரம்பியும், பொருள் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
குமரி மாவட்டம் அழிக்கால் பகுதியில் ஜூலை 12 முதல் கடல் சீற்றம் தொடர்ந்து இரவு பகலாக இருந்து வருகிறது. இதனால் பிள்ளைத்தோப்பு, மேலதுறை மக்கள் பெரிதும் இன்னலுக்கு உள்ளாக்கினார். இந்த கரோனா தொற்று காலகட்டத்தில் தகுந்த இடைவெளி கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய சூழலில் இருக்கும் மக்கள் பலரும் உயிருக்கு பயந்து வீடுகளில் இருந்து வெளியேறி ஊருக்கு சொந்தமான கலையரங்கில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அழிக்கால், பிள்ளைத்தோப்பு, மேல துறை ஊர் மக்கள் தூண்டில் வளைவு கேட்டு பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாததால் கடந்த ஆண்டும் இதே போல் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வந்த மாவட்ட ஆட்சியர் இந்த ஆண்டிற்குள் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். எனினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் தூண்டில் வளைவு அமைக்க முதல் கட்டமாக 30 கோடி ஒதுக்கியதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இருந்தும் இதுவரை தூண்டில் வளைவு அமைக்கும் பணி தாமதப்பட்டு வருகிறது. எனவே மீனவ மக்களை தொடர்ந்து வஞ்சிக்காமல் ஏற்கனவே அறிவித்த அழிக்கால் தூண்டில் வளைவு திட்டத்தை போர்க்கால அடிப்படையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என அதில் கூறப்பட்டிருந்தது.