கன்னியாகுமரி மாவட்ட ராஜாக்கமங்கலம் ஒன்றிய அனைத்துக் கட்சிகள் சார்பில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தர்மபுரம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்கப்படாத அனைத்து வீடுகளுக்கும் மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கீடு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் ஊராட்சித் தலைவி, செயலாளர் ஆகியோர் குடிநீர் இணைப்பு வழங்குவதாக மக்களிடமிருந்து ரசீது இல்லாமல் சட்டவிரோதமாக பல்லாயிரக்கணக்கான ரூபாய் வசூல்செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சில நபர்களுக்கு தொகை திரும்ப வழங்கப்பட்டுள்ளதாகவும் தொகை திரும்ப வழங்கப்படாத நபர்களுக்கு உடனடியாகப் பணத்தை திரும்ப வழங்கவும் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
எனவே தர்மபுரம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் மீது விதிகளை மீறி செயல்பட்டுவரும் ஊராட்சித் தலைவி, செயலாளர் மீதான சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துக் கட்சிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.