கன்னியாகுமரி: பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. அதைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் கணபதி ஹோமம், உஷா பூஜை, அத்தால பூஜை, வலிய படுக்கை பூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தல், சந்தனகுட ஊர்வலம், பால்குட ஊர்வலம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த திருவிழாவில் 9 ஆம் நாள் நிகழ்ச்சியான நேற்று இரவு மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய சக்கர தீ வெட்டி ஊர்வலம் நடைபெற்றது. இந்த தீவெட்டி ஊர்வலத்தை தரிசனம் செய்ய குமரி மாவட்டம் மட்டுமல்ல கேரளாவில் இருந்தும் இரவென்றும் பாராமல் ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்தனர்.
பக்தர்களின் வசதிக்காக அண்டை மாநிலமான கேரளா, திருவனந்தபுரத்தில் இருந்தும், நாகர்கோவிலில் இருந்தும் மண்டைக்காட்டுக்கு இரவு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது.
இந்த பூஜையில் சிறப்பம்சமாக பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் அடங்கிய, சுமார் 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சுத்தமான முறையில் விரதம் இருந்து தயார் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. ஒடுக்கு பூஜை காண குமரி மாவட்டம் மட்டுமன்றி தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து கோயில் வளாகத்திலும், ஒடுக்கு பவனி வரும் வளாகத்திலும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
ஆகையால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு மொழி தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு!