தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு விளாத்திகுளம் தாலுகா கலைஞானபுரம் கிராமம், ஊர் நாட்டாமை தர்மலிங்கம் தலைமையில் கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மனுவில், கலைஞானபுரம் நடுவூர் துலுக்கன்குளம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் கோடையில் உப்பள தொழிலும் , மழைக் காலத்தில் மானாவாரி விவசாயமும் செய்து வருகிறோம். கிராமத்திற்குக் கிழக்கு பக்கமும், துலுக்கன்குளத்திற்கு தெற்கு பக்கமும் ஒரு தனியார் நிறுவனம் 60 ஏக்கரில் விதிமுறைகளை மீறி இறால் வளர்ப்பு தெப்பம் அமைத்து இறால்மீன் வளர்க்க ஏற்பாடு செய்து வருகிறது. இந்த தெப்பம் ஊரின் அருகே 20 அடி தூரத்தில் உள்ள காரணத்தினால் எங்கள் ஊரின் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியுள்ளது.
வீடு கட்ட தோண்டினால் 3 அடியில் உப்புநீர் தான் வருகிறது. இதனால், குடிநீர் மாசுபடுவதுடன் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுத் தோல் வியாதிகள் ஏற்படுகிறது. இதற்கு ஊர் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து விளாத்திகுளம் வட்டாட்சியர் சமாதான கூட்டம் நடத்தினார். ஆனால் அவரது செயல்பாட்டில் ஊர் மக்களுக்குத் திருப்தியில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் இறால் வளர்ப்பு பண்ணை அங்கீகாரத்தை ரத்து செய்து நிரந்தரமாக அகற்றி எங்களுடைய வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி - ஆட்சியரிடம் மனு!