தமிழ்நாட்டில் கரோனா தடை உத்தரவு காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால் மாணவர்கள் வீட்டிலிருந்தே பாடங்களைப் படித்துவருகின்றனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில், மாணவர்கள் ஏற்கனவே தேர்வுக்காகப் படித்த பாடங்கள் மறந்து போகாமல் இருப்பதற்காக ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. அதேபோல் அரசுப்பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்த மாவட்ட கல்வி அலுவலர்கள் முடிவுசெய்தனர்.
அதன்படி நாகர்கோவிலைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தின் உதவியுடன் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, அகஸ்தீஸ்வரம் அரசுப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் கல்வி முறை குறித்து செய்தியாளர்களிடம் அரசுப்பள்ளி ஆசிரியை ஆக்னஸ் கூறுகையில், "ஆன்லைன் மூலம் மாணவர்களை நேரடியாகப் பார்த்து பாடம் நடத்த முடிகிறது. இதனால் நீண்ட நாள்களுக்குப் பிறகு மாணவர்களை நேரில் சந்தித்த ஒரு உணர்வு ஏற்படுகிறது. மேலும் ஏற்கனவே அவர்கள் படித்த பாடங்களை அதில் இருக்கும் அவர்களின் சந்தேகங்களை ஆன்லைன் மூலம் எளிதாகத் தீர்த்துவைக்க முடிகிறது " என்றார்.
இதையும் படிங்க: 'அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் கல்லூரித் தேர்வுகள் நடைபெறும்'