கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் காந்தி நகர் காலனியைச் சேர்ந்தவர் வினோத் (21). இவர் வாடகை கார் ஓட்டுநராக இருந்து வருகிறார். அவரது நண்பர் ஜெனிஸ்டர் (25). இவர்கள் இருவருக்கும் இடையே நேற்றிரவு (மே 2) வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத், தனது வீட்டிலுள்ள வெட்டுக்கத்தியை எடுத்து வந்து, ஜெனிஸ்டரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து காயமைடந்த ஜெனிஸ்டர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆசாரிப்பள்ளம் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, வினோத்தைக் கைது செய்வதற்காக, அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
அப்போது, அவரது வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் கம்பியால் வயிற்றில் குத்தப்பட்டு வினோத் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் உடனடியாக, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். வினோத்துக்கு அரசு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
எனினும், சிகிச்சைப் பலனின்றி வினோத் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், வயிற்றுப் பகுதியில் படுகாயங்களுடன் ஜெனிஸ்டர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

கொலை செய்யப்பட்ட வினோத்தை ஜெனிஸ்டர் குத்தி கொலை செய்தாரா? அல்லது வேறு நபர்கள் யாரேனும் கொலை செய்தார்களா? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து ஆசாரிப்பள்ளம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் ஒரேநாளில் 20 பேருக்கு கரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 11 கிராமங்கள்!