கன்னியாகுமரி: அரபிக்கடல் பகுதிகளில் வரும் கர்நாடக விசைப்படகு மீனவர்கள் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட மீன்களை சட்ட விரோதமாக பிடித்துச் செல்வதாக குற்றம்சாட்டும் பல்வேறு கடற்கரை கிராம மீனவர்கள், இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இதனைத் தெடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை (டிச.16) இரவு குளச்சல் அரபிக்கடல் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட சாவாளை மீன்களை பிடித்து வருவதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அரபிக்கடல் கரைப் பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட கார்நாடகாவைச் சேர்ந்த 3 விசைப்படகுகளை குளச்சல் மீன்வளத்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.
தொடர்ந்து, 3 விசைப்படகுகளில் இருந்த கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த 30 மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சாவாளை மீன்களைப் பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அமிர்தேஸ்வரி, அமிர்தானந்தா, அஜனா ஆகிய மூன்று விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த மீன்களையும் பறிமுதல் செய்த மீன்வளத்துறை அதிகாரிகள் 3 படகுகளின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், விசைப் படகுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட டன் கணக்கிலான சாவாளை மீன்களை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்து நடவடிக்கை மேற்கொண்டதோடு படகுகளுக்கு அபராதமும் விதித்தனர்.
இதையும் படிங்க: போலீஸ் போல் நடித்து ரூ.29 லட்சம் பறிப்பு - கள்ள நோட்டு கும்பல் கைது