கன்னியாகுமரி: சாமிதோப்பு அடுத்த கீழமனக்குடி பகுதியில் உள்ள தும்புமில்லில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலையில் வட மாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள அறை நீண்ட நேரம் ஆகியும் திறக்கவில்லை.
சந்தேகமடைந்த மில் காவலாளி அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இளைஞர் ஒருவர் தலையில் சிமெண்ட் கல்லால் தாக்கிய நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மில் உரிமையாளருக்கும், தென்தாமரைகுளம் போலீசுக்கும் தகவல் கொடுத்தார்.
கன்னியாகுமரி டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி (பொறுப்பு), இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி விரைந்து வந்து படுகொலை செய்யப்பட்ட தொழிலாளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த தொழிலாளி பீகார் மாநிலம் கிழக்கு செம்பரம் மாவட்டம், சம்பகாச் பகுதியை சேர்ந்த நானாக் ஷா என்ற முன்னா (32) என்பது தெரியவந்தது.
மேலும் உடன் தங்கி இருந்த ஒரே ஊரை சேர்ந்த தொழிலாளி ரமேஷை போலீசார் தேடிவருகின்றனர். இந்த படுகொலை எதற்காக நடந்தது என்பது குறித்து தென் தாமரை குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநில காவல்துறைக்கு குமரி மாவட்ட போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பாடப்புத்தகம் கொண்டு செல்லாததால் 9ஆம் வகுப்பு மாணவனுக்கு பிரம்படி - ஆசிரியர் சஸ்பெண்ட்!