கன்னியாகுமரி: கரோனா தடுப்பு நடவடிக்கைகள், எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நாஞ்சில் அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் டிஆர்ஓ ரேவதி, மருத்துவத் துறை இணை இயக்குநர் பிரகலாதன், மக்கள் நல்வாழ்வுத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணலீலா, நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் செல்வராஜ், கரோனா சிகிச்சை வல்லுநர் மருத்துவர் பிரின்ஸ் பயாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் பேசியதாவது:
“கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுவருகின்றன. இதன் காரணமாக நோய்த்தன்மை தற்பொழுது குறைய தொடங்கியுள்ளது.
கிராமப் பகுதிகளில் அதிக அளவில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்துவருகின்றன. இதில் 18 வயது முதல் 44 வயது வரை உட்பட்டவர்களுக்கு ஒரு பகுதியாகவும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பகுதியாகவும், இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டவர்களுக்கு இன்னொரு பகுதியாகவும் போடப்பட்டுவருகிறது.
தடுப்பூசி போடும் இடங்களில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக வந்த புகாரை அடுத்து, தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்வதற்காகப் புதிய செயலியை அறிமுகப்படுத்த ஆலோசித்துவருகிறோம். இது விரைவில் நடைமுறைக்கு வரும்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு 24 மணி நேரத்தில் முடிவு தெரிவிக்கப்பட்டுவருகிறது. நோய்த்தொற்று காரணமாக உயிர் இறப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் சில பிரச்சினைகள் இருந்துவருகின்றன.
அது தொடர்பாக இதுவரை 150 புகார் மனுக்கள் வந்துள்ளன. அரசின் விதிமுறைப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பொதுமக்கள் லேசான காய்ச்சல், சளி போன்ற பிரச்சினைகள் இருந்தால் உடனடியாகத் தங்களை மருத்துவ பரிசோதனைக்குள்படுத்திக் கொள்ள வேண்டும். நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பாகப் புகார்கள் ஏதாவது இருந்தால் மக்கள் ஆட்சியரிடம் தெரிவிக்கலாம்.
முன்னதாக ஒரு சில மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் வந்ததன் அடிப்படையில், அவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கூடுதல் பணம் திரும்பப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்
இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை: எஸ்பி அலுவலகத்தில் மனைவி புகார்