திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வருகின்ற 17ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு திருவனந்தபுரம் செல்வது வழக்கம்.
பின்பு நவராத்திரி விழாவில் சாமி சிலைகளை வைத்து பூஜைகள் செயய்யப்பட்டு, விழா முடிந்ததும் மீண்டும் சாமி சிலைகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டுவரப்படும். தற்போது நிலவி வரும் கரோனா முடக்கத்தால், கோயில் விழாக்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், எளிய முறையில் தகுந்த இடைவெளியை கடைபிடித்து குறைந்த பக்தர்களுடன் இந்த ஊர்வலத்தை நடத்த வேண்டுமென மாவட்ட நிர்வாகம் நேற்று அனுமதி வழங்கியது.
அதன்படி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி எளிய முறையில் நடைபெற்றது. ரதவீதிகளில் அம்மன் வீதி உலா வந்தது. அம்மன் ஆஸ்ராமம், கோட்டார், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக பத்மநாபபுரம் அரண்மனை அடைகிறது.
சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் பல்லக்கு வாகனத்திலும், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் யானை மீதும் நாளை திருவனந்தபுரத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில்100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 1 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு!